Monday 2 May 2011

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்குரிய அடிப்படை தகுதிகள் ஒன்றும் இல்லை!

பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.உடுமலையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், தினமும் 15 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் உள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய அமைப்பு இல்லாமல், ஒரே நீளமாக குறுகியதாக உள்ளதோடு, பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் என ஐந்து வழிகள் அமைந்துள்ளன.
இதனால், உள்ளே வரும் வழி , வெளியேறும் வரும் வழி என குழப்பம் நீடித்து வரும் நிலையில், உள்ளே வரும் பஸ்கள் திரும்புவதற்கு வசதியில்லாமல் குறுகியதாக உள்ளதோடு, அனைத்து வழிகளும் இரு வழிப்பாதைகளாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாததால், பஸ்கள் நிற்கும் இடத்திலேயே பயணிகளும் காத்திருக்க வேண்டியதுள்ளது.

மேற்கு பகுதி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்திலும், திருப்பூர், மூணாறு, கிழக்கு பகுதி பஸ்கள் நிற்கும் இடம், கோவை வழித்தட பஸ்கள் நிற்கும் இடங்கள் என பயணிகள் அமருவதற்கு என இருக்கை இல்லாத ஒரே பஸ் ஸ்டாண்டாக உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளது. அதே போல், முக்கிய தேவையான கழிப்பிட வசதியும் இல்லை. இருந்த ஒரு கழிப்பிடமும் இடிந்துள்ளதோடு, கடும் துர்நாற்றத்தோடு சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் பொதுமக்கள் வரும் வகையில், மூன்று நடைபாதைகள் அமைந்துள்ளன.

இந்த நடை பாதைகளும் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், பஸ்கள் வேகமாக உள்ளே, வெளியே செல்லும் வழித்தடங்களையே பொதுமக்களும் பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்குள் இருக்கும் குறைந்தளவு இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சமையல் அறைகளாவும், கடைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால், பஸ்களும், பயணிகளும் ஒரே இடத்தை பயன்படுத்த வேண்டியதுள்ளதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
முறையான கழிப்பிட வசதி இல்லாததோடு, பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கழிவு நீர் சாக்கடைகள் அமைந்துள்ளதாலும், காலி இடங்கள் திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுவதாலும், நகராட்சி வணிக வளாகத்திலுள்ள ஓட்டல்கள், பேக்கரிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், எச்சில் இலைகள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே வெளியேற்றப்படுவதால் கடும் துர்நாற்றமும் அடித்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதியும் இல்லை. குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பராமரிக்கப்படாமல் வீணாக உள்ளன. உடுமலை பஸ் ஸ்டாண்டிலுள்ள கடைகள் மற்றும் வந்து செல்லும் பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் என ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் தரும் இதை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மாற்று திட்டம் கிடப்பில் : குறுகிய உடுமலை பஸ் ஸ்டாண்டை புற நகர் பகுதிக்கு இடம் மாற்ற திட்டமிருந்தது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்டை மாற்றுவதை விட, தற்போது 18 ஏக்கர் பரப்பளவிலுள்ள சந்தை வளாகத்தையும், நகராட்சியால் வாடகைக்கு விடப்பட்டுள்ள காலி இடங்களையும், ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களையும் மீட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டை சந்தையாக மாற்றவும் நகராட்சி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு, திட்ட வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....